தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 3 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை யானைக்கவுனி பகுதியில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு விரைந்த தனிப்படை போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் கட்டுக்கட்டான பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மூவரிடம் நடைபெற்ற விசாரணையில் யாசர் அராஃபத் என்பவர் குணா ஜெயின் மற்றும் மற்றொரு நபருக்கு பணம் கொடுக்க வந்தது தெரியவந்தது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் அறிவுறுத்தலின்பேரில் பணத்தை கொடுக்க வந்ததாக யாசர் தெரிவித்தார்.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் யானைக்கவுனி காவல் நிலையம் வந்த அதிகாரிகள் ரூ.1.43 கோடி பணத்தை பறிமுதல் செய்து பிடிபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.