இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, அச்சக உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று (17.03.2024) நடைபெற்றது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 127 A ன்படி எந்த ஒரு தேர்தல் விளம்பர சுவரொட்டி மற்றும் துண்டு பிரசுரமும் அது அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் விவரம் அதில் அச்சடிக்கப்படாமல் வெளியிடப்படக் கூடாது. எந்த ஒரு தேர்தல் விளம்பர சுவரொட்டி மற்றும் துண்டு பிரசுரம் வெளியிடுபவர்கள், அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு உறுதி மொழியினை கையொப்பமிட்டு அவரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்த இரு நபர்களின் சாட்சி கையொப்பத்துடன் இரு நகல்களை அச்சக உரிமையாளரிடம் வழங்க வேண்டும். இந்த உறுதிமொழியின் ஒரு நகல் அச்சடிக்கப்பட்ட தேர்தல் சுவரொட்டி அல்லது துண்டு பிரசுரம் நகலுடன் அச்சடிக்கப்பட்ட உடன் அச்சக உரிமையாளரால் மாவட்ட ஆட்சியரகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
தேர்தல் சுவரொட்டி அல்லது துண்டு பிரசுரம் ஒளிநகல் எடுக்கப்பட்டாலும் அச்சடிக்கப்பட்டதாகவே கருதப்படும். அதனைத்தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, பொறுப்பு அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.