புதுக்கோட்டையில் 73 ஏழைப்பெண்களுக்கு ரூ.29.75 இலட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 73 ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கத்தினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பெண்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடைவதற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை, எளிய பெண்களுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
அதன்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித்திட்டம் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணம் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம் ஏழைப்பெண்களுக்கு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2023-2024 ஆம் நிதியாண்டிற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டம் மற்றும் பட்டயம் படித்த 46 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.23,00,000/- மற்றும் தலா 8 கிராம் தங்கம் வீதம் 368 கிராம் தங்கமும், ஏனைய 10-ம் வகுப்பு வரை படித்த 27 பெண்களுக்கு ரூ.25,000/- வீதம் ரூ.6,75,000/- மற்றும் தலா 8 கிராம் தங்கம் வீதம் 216 கிராம் தங்கமும் என மொத்தம் 73 பெண்களுக்கு ரூ.29,75,000 நிதியுதவி தொகையும், 584 கிராம் தங்கமும் இன்றையதினம் வழங்கப்பட்டது. என தெரிவித்தார்.
முன்னதாக,தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள மதி சிறு தானிய உணவகத்தினை இன்றையதினம் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, உதவித் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ராஜாமுகமது, அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், தொழில் கூட்டுறவு அலுவலர் மனோகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.