கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் டெல்லி நோக்கி நிச்சயம் போராட்டம் நடத்தப்படும் என பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு பொதுச்செயலாளர் சர்வன் சிங் பாந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு தந்தது.
அதன்பேரில் போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர். ஆனால், சுமார் 4 ஆண்டாகியும் எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றாத நிலையில், 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்த ‘டெல்லி சலோ’ பேரணிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய சங்கங்கள் தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இது தொடர்பாக பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு பொதுச்செயலாளர் சர்வன் சிங் பாந்தர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் தேவை. பயிர்க் கடனை ரத்து செய்ய வேண்டும்.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள 45,000 வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். கடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் வலியுறுத்த விரும்புகிறோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் டெல்லியில் அமைதியாக விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.