ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் செல்லும் சாலைகளை தடுப்பு கம்பிகள் அமைத்தது ஏன் என்று அரியானா அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் விதமாக எல்லையில் தடுப்புகளை அமைத்து இணைய சேவையை துண்டித்த அரியானா அரசுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயக நாட்டில் விவசாயிகளின் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. விவசாயிகள் செல்லும் வழிகளில் ஆணிகள் பதிக்கப்பட்ட மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது என வாதிட்டார். அரியானா அரசு சார்பில், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை இருப்பதாலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்கிறார். மேலும் அவர் டெல்லி அரசிடம் அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்தியிருக்கலாம் என்றும் பரிந்துரைத்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஜனநாயக நாட்டில் மக்கள் எந்த மூலைக்கும் நகர்ந்து செல்வதற்கு உரிமை உண்டு என்று தெரிவித்ததோடு, அப்படி செல்லக்கூடிய விவசாயிகளை தடுத்து நிறுத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரியானா அரசு வழக்கறிஞர். டிராக்டர்களில் ஆயுதங்களை பொருத்தி விவசாயிகள் அணிவகுத்து வந்ததால் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பதிலளித்தார். இந்த விவகாரத்தில் பஞ்சாப், அரியானா அரசுகள் மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட தலைமை நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.