மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி: பஞ்சாபில் இருந்து தொடங்கியது விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி

மத்திய அமைச்சர்களுடன் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி இன்று தொடங்கியது.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிப்.13 ம் தேதி டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தன. இந்தச் சூழலில், சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று மாலை 5.30-க்கு தொடங்கி சுமார் 7 மணி நேரம் நீடித்து. பேச்சுவார்த்தையில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தலைமையில் விவசாய அமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரவு 11 மணி அளவில், மின்சாரச்சட்டம் 2020, லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை, விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகளின் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகள் தொர்டர்பாக இரண்டு தரப்புகளுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. என்றாலும், முக்கிய கோரிக்கைகளான அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக சட்டம் இயற்றுதல், விவசாயிகளின் கடன் ரத்து, சுவாமிநான் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது போன்ற கோரிக்கைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனால் நள்ளிரவுக்கு முன்பு பேச்சு வார்த்தை தோல்வியில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து “இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடந்தது. எங்களது ஒவ்வொரு கோரிக்கை மீதும் விவாதம் நடந்தது. ஆனால், அவை வெறும் கோரிக்கைகள் அல்ல, அவை அனைத்தும் அரசின் வாக்குறுதிகள். அதனால் காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி டெல்லி நோக்கி செல்ல வேண்டும் என்பது என் கருத்து” என விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்திருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் பாதி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தது. நாங்கள் இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் முடிக்க விரும்புகிறோம். ஆனால் அரசு உண்மையாக இல்லை. அவர்கள் நேரத்தை வீணாக்கவே விரும்புகிறார்கள் என்று விவசாயிகள் பிரதிநிதி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே விவசாயிகளின் பேரணியைத் தடுக்கும் நோக்கில் டெல்லியை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கு, திக்ரி மற்றும் ஹாசிபூர் எல்லைப் பகுதிகளில் ஏராளமான போலீசார் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். நகரில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், டிராக்டர்கள் நகருக்குள் நுழைவதற்கு ஒரு மாதகாலம் போலீஸார் தடைவிதித்துள்ளனர். இந்தப்பகுதிகளில் கூட்டம் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகளில் காங்கரீட், முள் வேலி தடுப்புகள் போடப்பட்டுள்ளன. வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா அரசும் அம்பாலா, ஜிந்த், ஃபதேகாபாத், குருஷேத்ரா, சிர்ஷா உள்ளிட்ட பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. பேரணி நகருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் சிமெண்ட் தடுப்புகள், இரும்பு ஆணிகள் மற்றும் முள்கம்பிகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் ஹரியாணா அரசு 2021ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மாநில உள்துறை விதிகளை தீவிரமாக கடைபிடிக்கும் படி குடிமை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் ஏற்கெனவே விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராட்டம் நடத்தியதால், இந்த முறை அதுபோல் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.