புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன் மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவானது பள்ளி முதல்வர் பெ.சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு  சமூக செயற்பாட்டாளர் முத்தால், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கலைமணி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளர் ஜெய்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முன்னாள் மாணவரும் மருத்துவருமான பெரியசாமி மற்றும் முத்தால் 10, 11, 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

மருத்துவர் பெரியசாமி தனது உரையில்,”மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களோடு நல் உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, நல்ல ஒழுக்கமுள்ள மாணவர்களாக உயர்ந்து, பள்ளிக்கு பெருமைத் தேடித் தர வேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக கவிஞர், பட்டிமன்ற உரையாளர், ஆலங்குடி வெள்ளைச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “மாணவர்கள் ஒவ்வொரு நாளையும் பயனுள்ள நாளாக செலவழிக்க வேண்டும். இணையதளம் மாணவர்களை படிப்பிலிருக்கும் கவனத்தை சிதரடிக்கும் வகையில் உள்ளது. ஆகவே இணைய தளத்தை பயன்படுத்துவதைக் குறைத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே உங்களது வாழ்வைச் செம்மையாக்கும் என்று மாணவர்களுடன் கலகலப்பாக உரையாடினார்.

பள்ளி ஆண்டறிக்கையினை பட்டதாரி ஆசிரியர் இன்பராஜ் வாசித்தார். மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டினை அனைத்து ஆசிரியர் பெருமக்களும் சிறப்பாகச் செய்திருந்தனர். விழா முடிவில் முதுகலை ஆசிரியர் பிரபு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் அறிவியல் ஆசிரியர்

வெங்கடசுப்பிரமணியன் இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறினார். விழா நிகழ்வுகளை பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், அலுவலகப்பணியாளர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.