அரியலூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நகராட்சி தலைவி சாந்தி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். நகராட்சி இளநிலை உதவியாளர் நல்லதம்பி தீர்மானங்களை படித்தார். நகராட்சியின் பல்வேறு செலவினங்கள் உட்பட, 59 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் படிக்க துவங்கியதும், அதிமுக கவுன்சிலர் வெங்கடாஜலபதி இடை மறித்து, இந்த தீர்மானங்களில் வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. கேள்வி முறையில்லாமல் நகராட்சி செயல்பாடு நடைபெறுகிறது எனக்கூறி, நகராட்சி கூட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எனது வார்டு பகுதியில், சுகாதாரப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. துப்புரவு ஆய்வாளர்கள் பலரும், ஏனோ தானோ என செயல்படுகிறார்கள் என, திமுக வார்டு கவுன்சிலர் ராஜேஷ் ஆவேசமாக பேசினார். இதைத்தொடர்ந்து, நகராட்சி பகுதியில் உள்ள மூன்று வார்டுகளில் சுகாதாரப் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு, நகராட்சி தலைவி சாந்தி கலைவாணனுடன் இணைந்து, சான்றிதழ்களை வழங்கிய நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பேசும்போது கூறியதாவது: அரியலூர் நகராட்சி பகுதியில், சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்கான புதிய வழிமுறைகள் உருவாக்கி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்பாக செயல்படும் தூய்மை பணியாளர்களுக்கு, எனது சொந்த செலவில் ஊக்கப் பரிசு வழங்கப்படும். அரியலூர் நகராட்சி பகுதியில் உள்ள எந்த ஒரு பிரச்சனை குறித்தும், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்களும், பொதுமக்களும், என்னிடம் நேரடியாக முறையிடலாம். அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
கூட்டத்தில், அரியலூர் நகராட்சி மேலாளர் சரஸ்வதி, ஓவர்சியர் காசிநாதன், சுகாதார ஆய்வாளர் தர்மராஜ், நகராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தி வார்டு கவுன்சிலர்கள் சேசு மேரி, செல்வராணி, சத்தியன், கண்ணன், ரேவதி, மகாலட்சுமி, இன்பவள்ளி, முகமது இஸ்மாயில் மலர்கொடி, வெங்கடாஜலபதி, ஜெயந்தி, ராணி, ராஜேஷ், ஜீவா, புகழேந்தி, மற்றும் நகராட்சி பணியாளர்கள், பலரும் கலந்து கொண்டனர்.