“மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் பாஜகவின் அண்ணாமலை கூறுவதைப் போன்று அமலாக்கத் துறை வந்தாலோ, வருமான வரித்துறை வந்தாலோ நாங்கள் கவலைப்படப்போவதில்லை, வந்தால் வரவேற்கிறோம்” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்திருக்கிறார்.
சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது, “ஆளுநருக்கு நிறைய கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. சில கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். சில கோப்புகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை நடவடிக்கையில் திமுக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இதுபோன்று எடுத்ததில்லை.
கோடநாடு கொலை வழக்கில் தடயவியல் ஆய்வாளர்கள் திருச்சியில் சோதனை நடத்தியதைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களது கடமைகளை செய்துள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். கோடநாடு வழக்கில் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு 36 மாதங்களாகியும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருமே பாஜவின் கொத்தடிமைகள். இருவரும் தங்களது கட்சியை பாஜகவினரிடம் அடகு வைத்துவிட்டனர். இதைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை கோடநாடு வழக்குக்கு புத்துயிர் கொடுத்து விசாரித்துகொண்டு இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையினால்தான் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் பாஜகவின் அண்ணாமலை கூறுவதைப் போன்று அமலாக்கத் துறை வந்தாலோ, வருமான வரித்துறை வந்தாலோ நாங்கள் கவலைப்படப்போவதில்லை, வந்தால் வரவேற்கிறோம்” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.