பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ளது டெரா இஸ்மாயில் கான் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தராபன் தாலுகாவில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இநத் தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.
போலீஸ் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான அதிகப்படியான வீரர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் மட்டும் 93 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 90 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 135 பேர் காயம் அடைந்ததாகவும் செய்தி நிறுவனம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 15 தனிநபர்கள் கடத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் வருகிற 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சில நாட்களாக அந்த நாட்டில் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும், குண்டு வெடிப்புகளும் நடந்து வருவது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் கராச்சியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக பலுசிஸ்தான் மாகாணம் கலாட் நகர் முசுல் சராட் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலக கட்டிடத்தை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பினார்கள்.
இந்த குண்டு அலுவலக கட்டிடம் அருகே விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த 6 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். வெடித்த குண்டு எந்த வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை. அதனை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வீசிய மர்ம மனிதர்களை தேடிவருகின்றனர். தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.