ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை மாநகராட்சியில் தற்போது குடிநீர் பிரச்சினை இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை சார்பில் 11.98 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 13 திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் 152.67 கோடி ரூபாய் மதிப்பிலான 52 புதிய திட்டங்களுக்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.

இதன் பின் அவர் பேசியதாவது: கடந்த 2015-ம் ஆண்டு பெய்த மழை பாதிப்பில் இருந்து சென்னை மீள 10 நாட்களான நிலையில், கடந்த வருடம் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இரண்டே நாட்களில் சென்னை மீண்டு வந்துள்ளது. தற்போது சென்னை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை என்பதே இல்லை.

சென்னை மாநகராட்சியின் வளர்ச்சி, தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கான திட்டங்களை முதல்வர் கவனத்துடன் செய்து வருகிறார் என்று கூறினார்.