“தேர்தல் நேரத்தில் தவறு செய்தால் கட்சியில் இருந்து நீக்கம்” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தேர்தல் நேரத்தில் தவறு செய்யும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்களவை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களான அனிதா ஆர்.ஆனந்த மகேஸ்வரன், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: “மக்களவை தேர்தலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் இண்டியா கூட்டணி என்ற வலுவான கூட்டணி உருவாகியுள்ளது. அடுத்த ஆட்சி இண்டியா கூட்டணியின் கூட்டாட்சி தான் அமையும். தூத்துக்குடி மக்களவை தொகுதியில், ஏழை, எளிய மக்களை நேசிக்க கூடிய, மழை, வெயில் எந்நேரமும் மக்களை பற்றி சிந்திக்க கூடிய கனிமொழி எம்பி தான் மீண்டும் வேட்பாளராக நிற்பார். அவரை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இதற்காக சட்டப்பேரவை தொகுதி வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் ஒன்றிய அளவிலான குழுவை தேர்வு செய்ய வேண்டும். இந்த குழுவில் அனைவரையும் ஒருங்கிணைத்து பொருத்தமானவர்களை தேர்வு செய்து ஒன்றியக்குழுவை அமைக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரங்களை மாவட்ட கழகத்தில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளியூரில் வசிப்பவர்கள், இறந்தவர்கள் விவரங்களை 10 நாட்களுக்குள் சேகரிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், கட்சி தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களை கட்சியில் இருந்து நீக்க மாவட்ட செயலாளர் என்ற முறையில் நடவடிக்கை எடுப்பேன்.

தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கட்சி தலைமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும். எந்தவித கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பணியாற்ற வேண்டும். வெற்றி ஒன்றே நமது குறிக்கோள். அது சாதாரண வெற்றியாக இருக்க கூடாது. எதிர்த்து நிற்பவர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்” என்றார் அமைச்சர்.

கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ஆர்.சுதானந்தம், மாநில திமுக வர்த்தகரணி இணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்களான முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், மாடசாமி, செந்தூர்மணி, மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுகபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்: தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எம்எல்ஏ பேசுகையில், “நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் நமது வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்ற சட்டப்பேரவை தொகுதியாக ஓட்டப்பிடாரம் தொகுதி விளங்க வேண்டும். அந்த வகையில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்றியக்குழு அமைத்து பணியாற்ற வேண்டும்.

ஒன்றிய செயலாளர்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து தகவல்களை தெரிவித்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை குழு வருகிறது. அந்த குழுவிடம் நம் பகுதிக்கு தேவையானவற்றை மனுக்களாக கொடுக்கலாம்” என்றார் அவர்.கூட்டத்தில் பொறுப்பாளர்கள் ஆர்.சுதானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, ராமசாமி, சுரேஷ்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.