“இனிவரும் காலங்களில் பாஜக அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், அறிவித்த வாக்குப்பதிவு சதவீதத்துக்கும், அடுத்த நாள் தேரதல் ஆணையம் அறிவித்த சதவீதத்துக்கும் 7 சதவீதம் வித்தியாசம் உள்ளது. வாக்கு எண்ணும்போது மேலும் 1.2 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பதிவானதாக காட்டுகிறார்கள்.
பாஜக இப்படி மக்களை நம்பாமல் இயந்திரங்களை நம்பி தேர்தலை சந்திப்பது, ஜனநாயகத்துக்கு கேடானது. ராஜீவ் காந்தி நாட்டு நலன் கருதி அறிவியல் புரட்சியை ஏற்படுத்தினார். அந்த அறிவியலை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் முறையாக தேர்தலை நடத்தவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால் இனிவரும் காலங்களில் பாஜக அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ் மொழி குறித்தும், திருக்குறள் குறித்தும் பேசும் பிரதமர் மோடி, தமிழகத்தில் உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள குடஓலை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இசைவாணி 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.
இசைவாணி தவறாக பாடி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைவாணிக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்ததற்கு காரணம் அவர் ஒரு மொழியையும், இனத்தையும் இழிவுப் படுத்தி பேசியிருந்தார்.
இசைவாணி பாடிய பாடல் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் இல்லை. நானும் இந்து தான். நானும் ஐய்யப்பன் கோயிலுக்கு சென்று இருக்கிறேன். இந்த விவகாரத்தை ஆர்எஸ்எஸ் வேண்டும் என்றே பெரிதுப்படுத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் நல்லமுறையில் முன்னேறி வருகிறது” என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.