புதுக்கோட்டை மாவட்டம்/ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சி, பொன்னங்கன்னிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று கலந்துகொண்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு உளுந்து விதை தொகுப்புகளை வழங்கி, சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப் புறங்களின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி என்ற அடிப்படையில் வருடத்திற்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அந்தவகையில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குக்கிராமங்களுக்கும் சென்றடையும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
அரசின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடனும், பொதுமக்களின் பங்களிப்புடனும் நடைபெறுவதை உறுதி செய்திடும் வகையில், ஜனவரி-26 குடியரசு தினம், மார்ச்-22 உலக தண்ணீர் தினம், மே-1 உழைப்பாளர் தினம், ஆகஸ்டு-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி தினம், நவம்பர்-1 உள்ளாட்சி தினம் என ஆண்டுக்கு 6 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
அந்தவகையில் நவம்பர்-1 உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் இன்றையதினம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளப்பட்டது. இக்கிராம சபைக் கூட்டத்தின் மூலமாக பொதுமக்களின் கோரிக்கைகளான சாலைவசதி, சுகாதாரவசதி, மின்வசதி, குடிநீர்வசதி, பேருந்துவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உரிய காலத்திற்குள் நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இக்கூட்டத்தில் கூட்டப்பொருட்களான, கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எனவே இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது பகுதிகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை எடுத்துக்கூறி பயனடைந்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.ஜி.சீனிவாசன், இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலெட்சுமி, ஊராட்சிமன்றத் தலைவர் (வாராப்பூர்) சி.சதீஸ்குமார், புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, இந்திராகாந்தி, வட்டாட்சியர் பரணி, ஊராட்சி செயலாளர் பாரதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.