கமலா ஹாரிஸின் உற்சாகமான தேர்தல் பிரச்சாரத்துக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரின் நம்பிக்கைச் செய்தி பலரை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பதவியில் இருந்து வெளியேறும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: அதிபர் தேர்தலில் உங்களின் உற்சாகமான பிரச்சாரத்துக்காக உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையினை ஒருங்கிணைக்கும் உங்களின் செய்தி பலரை ஊக்குவிக்கும்.
ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தங்களின் ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளன.
ஜனநாயக மதிப்பீடுகளுக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பு இனியும் நமது நட்புறவினை வழிநடத்தும். துணை அதிபராக மக்களை ஒன்றிணைப்பதற்கும், பொதுவான ஒரு நிலைப்பாட்டினைக் கண்டறிவதற்குமான உங்களின் உறுதி நினைவுகூரப்படும். உங்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
பரபரப்பாக நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிடம் கமலா ஹாரிஸ் வெற்றியை பறிகொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கும் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வாகியுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்துக்கான உங்களின் பார்வையில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். உங்களின் தலைமையின் கீழ், பரஸ்பர விருப்பமுள்ள துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பும் மேலும் விரிவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆகிய இருவருக்குமான வழிகள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் தொடந்து பணியாற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
பரபரப்பாக நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்த டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் 45வது அதிபராக பதவி விகித்தார்.