முதன்முறையாக மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் சென்னை ஐஐடி

மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் ‘நிர்மாண் செயல்விளக்க நாள் 2024’ நிகழ்ச்சி, சென்னை ஐஐடியில் இன்று நடைபெற்றது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), நிர்மாண் ஒத்துழைப்போடு மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக முதன்முறையாக ‘நிர்மாண் செயல்விளக்க நாள் 2024’-க்கு ஏற்பாடு செய்துள்ளது. நிர்மாண் என்பது இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கருத்தாக்கங்களை சந்தைக்கு ஏற்ற வகையில் தயாரிப்புகளாக மாற்றவும் சென்னை ஐஐடி வளாகத்தில் இயங்கிவரும் வழிகாட்டும் அமைப்பாகும்.

சென்னை ஐஐடி தொழில் ஊக்குவிப்பு மையத்தின் உத்திசார் கூட்டுமுயற்சியுடன் செயல்பட்டு வரும் நிர்மாண், தொழில் முனைவோருடன் மாணவர்களை இணைக்கிறது. அத்துடன் மாணவர்களின் கருத்தாக்கங்களை அன்றாடப் பயன்பாடுகளுக்கான தயாரிப்புகளாக மாற்றவும் உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவு, சுகாதார தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 புத்தொழில் நிறுவனங்கள், தங்களின் யோசனைகள் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை முதலீட்டாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், சென்னை ஐஐடி சமூகத்தினர் ஆகியோரிடம் ‘நிர்மாண் செயல்விளக்க நாள் 2024’ல் சமர்ப்பித்துள்ளன. ஆண்டுதோறும் இதேபோன்றதொரு நிகழ்வை நடத்தவும் இக்கல்வி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிர்மாண் செயல்விளக்க நாள்-2024 நிகழ்வை சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி இன்று தொடங்கி வைத்தார். வென்சர்ஈஸ்ட் பொதுப் பங்குதாரர் டாக்டர் ஸ்ரீகாந்த் சுந்தர்ராஜன் கவுரவ விருந்தினராகப் பங்கேற்றார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்வில் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய காமகோடி, “செயல் விளக்க நாள் தொடக்கம் என்பது தொழில்முன் ஊக்குவிப்புக்கு முக்கிய மைல் கல்லாகும். மாணவத் தொழில்முனைவோர் தங்களின் திறமை, படைப்பாற்றல், உந்துதல் ஆகியவற்றை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் மாணவர்களுக்கான ஒரு தளத்தை வழங்கும் சென்னை ஐஐடி-ன் அர்ப்பணிப்புக்கு இந்நிகழ்வே சான்றாகும்” எனக் குறிப்பிட்டார்.

“முதலீட்டாளர்கள், தொழில் முன்னணியினர், சாத்தியமான கூட்டு முயற்சியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதால் இளம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த செயல்விளக்க நாள் ஏவுதளம் போன்றதாகும். சென்னை ஐஐடி, நிர்மாண் ஆகியவற்றின் முதன்முறை புத்தாக்க உணர்வுகளை நேரில் காண வருமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தலைமையில் தற்போது இயங்கிவரும் 85 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிர்மாண் ஆதரவு அளித்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 26 நிறுவனங்கள் ஏற்கனவே செயல்பாட்டைத் தொடங்கி ரூ.1000 கோடிக்கும் அதிகமான அளவுக்கு நிதி திரட்டியுள்ளன. இதில் நிறுவனங்களைத் தொடங்குவதற்காக மட்டும் ரூ.108 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.