மதுரையில் ‘நியோமேக்ஸ்’ நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் ஆலோசனை

மதுரையை தலைமையாக கொண்டு ‘நியோமேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் கூடுதல் வட்டி, இரடிப்பு தொகை தருவதாக கூறி மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் லட்சக்கணக்கானோரிடம் முதலீடுகளை பெற்றது.

வாடிக்கையாளர்களுக்கு இரடிப்பு தொகை மற்றும் வட்டி தராமல் சுமார் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு மேல் ஏமாற்றியதாக அந்த நிறுவனத்துக்கு எதிராக புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகார்களின் பேரில் மதுரை, திருச்சியிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முக்கிய நிர்வாகிகளான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது.

இந்நிலையில் மதுரை விரகனூர் பகுதியிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ‘நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டார்கள் நலச்சங்கம்’ என்ற பெயரில் பொது மகாசபைக் கூட்டம் இன்று நடந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல் ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியது, “நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் முதலீட்டாளர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களான பாலகிருஷ்ணன், கமலக்கண்ணன் ஆகியோர் நமது பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர். நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக போலீஸில் புகார் அளிப்பதை தவிர்க்கலாம். புகாரால் பணம் கிடைக்க தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றனர்.

மூத்த குடிமக்கள் முதலீட்டார்கள் பொது மகாசபை நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு மூத்த குடிமக்களும், தங்களது வாழ்நாளில் கிடைத்த செட்டில்மெண்ட் பணத்தை முதலீடு செய்தோம். நியோமேக்ஸ் நிறுவனம் தொடர்பான சில தகவல்களால் தற்கொலைக்கு ஆளாகின்றனர். மூத்த குடிமக்களின் முதலீட்டு பணத்தை பெற்று தருவதற்காக இதுவரையிலும் புகார் அளிக்காததால் இங்கு கூடியுள்ளோம். நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் ஆகியோர் மூத்த குடிமக்களின் முதலீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததால் இக்கூட்டத்தை நடத்தியுள்ளோம்’’ என்றனர்.

இதற்கிடையில், “கூட்டத்தின்போது, ஒவ்வொரு முதலீட்டாளரிடம் இருந்தும் ஓரிரு காரணங்களைக் கூறி ரூ.600 வசூலிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பம் ஒன்று வழங்கி அதில் முதலீட்டார்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் நியோமேக்ஸ் நிறுவனம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.