தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகரித்து வந்தது. இதன் காரணமாக முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாளும் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக கரூர், ஈரோடு, மதுரை விமான நிலையம் பகுதிகளில் 106 டிகிரி வெயில் நிலவியது. திருச்சி 104 , பாளையங்கோட்டை, நாமக்கல் 102, திருப்பத்தூர், சேலம், கோவை 100, சென்னை, தஞ்சை, வேலூர் 99 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம்,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகா, ஆந்திரா, ராயலசீமா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது