“சானாதனம் குறித்த உதயநிதியின் கருத்து தவறானது. இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்” என்று, தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில், பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றை எல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது.
இதுதொடர்பாக உதயநிதி மீது இந்தியாவின் பல மாநிலங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. உதயநிதிக்கு எதிராக பல மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்தியா கூட்டணியில் உள்ள பல அரசியல் தலைவர்களும், உதயநிதியின் பேச்சைக் கண்டித்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு உடன்படவில்லை என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், சனாதனம் குறித்து உதயநிதியின் பேச்சை, தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கண்டித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இந்தக் கேள்விக்கு பதில் அளித்த அவர், “உதயநிதி ஸ்டாலினின் கருத்து தவறானது; அது அவருடயை சிந்தனை. சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும். அவர் நம்பிக்கை அவருடையது, என் நம்பிக்கை என்னுடையது. ஆனால், அடுத்தவர் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பேசக்கூடாது. இந்த சிஸ்டத்தைத்தான் பாஜக சீர்குலைத்து வைத்துள்ளது. சனாதன எதிர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநிலத்தில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ரேவந்த் ரெட்டி, உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்புப் பேச்சை கடுமையாக கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.