
9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பையொட்டி அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச் செல்வம் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அரசின் பள்ளிகள் திறப்பு தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறந்தாங்கி கல்வி மாவட்டத்திலுள்ள 91 அரசுப்பள்ளிகள், 27 மெட்ரிக் பள்ளிகள், 3 சி.பி.எஸ்.சி பள்ளிகள் என அனைத்தும் பின்பற்றகின்றனவா என ஆய்வு செய்து, தலைமை ஆசிரியர்களிடமும், ஆசிரியர்களிடமும் பள்ளி திறப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.
சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்டக்கல்வி அலுவலர் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், ஆய்வகம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்தையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார். சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், வகுப்பறைத் தூய்மை, ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போடுதல், சத்து மாத்திரை வழங்குதல், உடல் வெப்பநிலை சரிபார்ப்பு, அவசர மருத்துவக்குழு, சுகாதாரக்குழு மற்றும் உணவுக்குழு தொடர்பான செயல்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார். பள்ளி ஆய்வின் போது பள்ளியின் தலைமையாசிரியர் பி.சுதாகர் மற்றம் மற்ற ஆசிரியர்களும் உடனிருந்தனர்.