75 வது சுதந்திர தினவிழா: டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கடும் பாதுகாப்பு

ஆகஸ்ட் 15ம் தேதி 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டுகள் வழங்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

வாடகை வீடுகளில் குடியிருப்போரை வீட்டு உரிமையாளர்கள் உரிய அடையாள சான்று வைத்திருக்கின்றனரா என்று சோதிக்கும்படியும் டெல்லி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரிலும் சுதந்திர தினத்தை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இரவு ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.