70 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சொத்துகளை விற்பதா ? – பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

70 ‌‌‌‌‌‌ஆண்டுகளாக நாட்டில் உருவாக்கப்பட்ட சொத்துகள் விற்பனைக்கு வந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்

அரசின் சொத்துகளை குத்தகைக்கு விட்டு அடுத்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆண்ட 70 ஆண்டுகளில் எதுவுமே நடக்கவில்லை என குற்றஞ்சாட்டும் பாஜக, தற்போது அதே 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சொத்துகளை விற்பதாக குற்றஞ்சாட்டினார்.

பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்காததே இந்த அவல நிலைக்கு காரணம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். மோடி அரசின் இத்திட்டத்தால் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கமே நிலவும் என்றும் இதனால் வேலைவாய்ப்பு உருவாக்கம் பாதிக்கப்படும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தனியார் மயமாக்கலை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்ற ராகுல் காந்தி, நஷ்டமடையும் அரசு நிறுவனங்களின் பங்குகளை மட்டுமே தங்கள் ஆட்சிக் காலத்தில் விற்றதாக தெரிவித்தார். தனது சொத்துகளை விற்கும் மிகப்பெரிய திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட எவரையும் அரசு கலந்தாலோசிக்கவில்லை என ப.சிதம்பரம் விமர்சித்தார்.