50% பேருக்கு முதல் தடுப்பூசி நிறைவு – மத்திய அமைச்சர் தகவல்

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

 நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியை கடந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே தடுப்பூசி பணிகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 ஒட்டுமொத்த மக்கள் தொகையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தகுதி வாய்ந்தவர்களில், 50 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை ஊசி செலுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 18 முதல் 44 வயதுடையவர்களில் 23 கோடியே 18 லட்சத்து 95 ஆயிரத்து 731 பேருக்கு முதல் தவணையும், 2 கோடியே 33 லட்சத்து 74 ஆயிரத்து 357 பேருக்கு இரண்டாவது தவணையும் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.