தலைகீழாக ஓவியத்தை வரைந்து அசத்தும் சிறுவன், 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரம் அருகேயுள்ள கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜெகன் விஜய் – கிரிஜா தம்பதியின் மகன் அஸ்வா. இவர், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இவருக்கு நான்கு வயது இருக்கும்போது ஓவியத்தின் மீது கொண்ட தீராத மோகத்தால் தனது தந்தையிடம் ஓவியத்தில் பயிற்சி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அஸ்வாவின் தந்தை ஜெகன் விஜய் சற்றும் தயக்கம் காட்டாமல் தனது மகன் விரும்பியதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று, ராமநாதபுரத்தில் ஓவியப் பயிற்சி அளிக்கும் பள்ளியில் சேர்த்து ஓவிய பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது 9 வயதாகும் அஸ்வா, மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளை பெற்றுள்ளார்.
தற்போது கொரோனா காலம் என்பதால் ஆன்லைனில் நடத்தப்படும் ஓவியப் போட்டிகள் கலந்துகொணடு அதில், பல வெற்றிகளை பெற்று 50க்கும் மேற்பட்ட பதக்கங்கள் கேடயங்கள் என ஏராளமான சான்றுகளை வாங்கி ஓவியத்தில் சாதனை படைத்து வருகிறார்.
ஓவியத்தை ஓவியர் ஒருவர் வரையும்போது மேலிருந்து கீழ்நோக்கி வரைவார்கள். ஆனால், எனது மகன் அஸ்வர ஓவியம் வரையும்போது தலைகீழாக வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். மேலும், உலக அளவில் ஒவியத்தில் சாதனை படைக்க வேண்டும் என்பது எனது மகனின் லட்சியம் என்று தந்தை ஜெகன் விஜய் கூறினார்.