பெற்றோர் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளி ஒன்றில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், ”நாளை முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பள்ளி இயங்கும். ஒவ்வொரு மேஜையிலும் தலா இரு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவர்.
பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. பெற்றோர் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள் முகக் கவசம் அணியாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் முகக்கவசம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 5 வகுப்புகள் நடைபெறும். காலை 9.30 மணிக்குத் தொடங்கி, அனைத்துப் பள்ளிகளும் மாலை 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.