
நடிகை ராதிகா சினிமாத்துறைக்கு வந்து 43 வருடங்கள் ஆனதையொட்டி ‘அருண் விஜய் 33’ படத்தில் நடித்துவரும் ராதிகாவுக்கு படப்பிடிப்புத் தளத்திலேயே கேக் வெட்டி படக்குழுவினரால் கொண்டாடப்பட்டது.
நடிகர் எம்.ஆர் ராதாவின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும் தனது தனித்துவ நடிப்பால் மிளிர்ந்துவரும் நடிகை ராதிகா திரைத்துறைக்கு வந்து 43 வருடங்கள் ஆகின்றன. கடந்த 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் அறிமுகமானார். ‘கிழக்குச் சீமையிலே’,’இன்று போய் நாளை வா’,’ஊர்காவலன்’,’தாவணி கனவுகள்’ என பல்வேறு படங்கள் ராதிகாவின் நடிப்பில் கவனம் ஈர்த்தவை.
இந்த நிலையில், தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் ‘அருண் விஜய் 33’ படத்தில் ராதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 43 வருடம் நிறைவை ஒட்டி படக்குழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு படப்பிடிப்பு இடைவேளையில் ஸ்வீட் சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர். ஹரி, அருண்விஜய், தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இணை தயாரிப்பாளர் ஜி.அருண்குமார், ஒளிப்பதிவாளர் கோபிநாத், யோகிபாபு, ராஜேஷ், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி மற்றும் அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.