4 வயது சிறுமியை நாசம் செய்த கொடூரனுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே 17 ஆண்டுகளுக்கு முன்பு 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் அரசு இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடந்த 2003 ஆம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வினோத் சக்கரவர்த்தி என்ற குற்றவாளியை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர்.அதன்பின் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி வினோத் சக்கரவர்த்தி தலைமறைவானார்.

குற்றவாளியை பிடிக்க முடியாததால் இந்த வழக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.16 ஆண்டுகளாக குற்றவாளியை சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த ஆண்டு புதுக்கோட்டை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார் மீண்டும் இந்த வழக்கின் குற்றவாளியை தேடத் தொடங்கினர்.அப்போது குற்றவாளி வினோத் சக்கரவர்த்தி ஜமீன் என பெயர் மாற்றம் செய்து கொண்டு இஸ்லாமியராக மதம் மாறி கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே  இரு  பெண்களை திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ்ந்து வருவது தெரிய வந்தது.இதனையடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற சிபிசிஐடி போலீசார் குற்றவாளியை கடந்த ஆண்டு கைது செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்தனர்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.அதன்படி 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக குற்றவாளி வினோத் சக்கரவர்த்திக்கு  ஆயுள் தண்டனையுடன் ரூ 2 லட்சம் அபராதம் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 4லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் நீதிபதி சத்தியா உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்று கொடுத்த புதுக்கோட்டை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயகுமாரிக்கும் நீதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.