“3 மாதங்களாக சம்பளம் வரவில்லை புதுக்கோட்டை ஊராட்சி செயலர்கள் விரக்தி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊராட்சி செயலர் ஒருவர் கூறியதாவது; புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல் உட்பட பல்வேறு பணிகளில் ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டு வருகிறோம்.

மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய இடத்தில் இருப்பதாலும், உயர் அலுவலர்களுக்கு அன்றாட அலுவல் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டியதாலும் நாளுக்கு நாள் பணிகள் அதிகரித்து வருகின்றன. பணியாற்றும் இடத்துக்கும், பிற இடங்களில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்களுக்கும் அடிக்கடி சென்று வர வேண்டியுள்ளது. ஊராட்சிகளில் போதிய நிதி இல்லாத நிலையில், இருக்கும் பற்றாக்குறை நிதியை வைத்துதான் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குகிறோம். ஆன்லைன் மூலம் வசூலாகும் வரிகள், தலைமை அலுவலக கணக்கில் சென்றுவிடுகின்றன.

கால நேரம் பார்க்காமல் வேலை செய்து வரும் எங்களுக்கு மாதந்தோறும் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. தற்போதைய நிலையில் 3 மாத ஊதிய நிலுவை உள்ளது. அத்தியாவசிய தேவைக்குக்கூட பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் அலுவலர்களிடம் பலமுறை தெரிவித்தும் தீர்வு இல்லை. பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தலின்போது இந்த வாக்குறுதியை அளித்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முன்னதாக நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்றார். இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘ஊராட்சி செயலர்களுக்கு சென்னையில் இருந்துதான் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய நிலுவை தொடர்பாக தலைமை அலுவலகத்துக்குத் தெரியப்படுத்துகிறோம்’’ என்றனர்.