24 வயது பெண் கர்ண பத்மாசனம் செய்து உலக சாதனை

கும்மிடிப்பூண்டியில் 24 வயது பெண் ஒருவர் 10 நிமிடங்கள் கர்ண பத்மாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சூரியநாராயணன் – புஷ்பலதா தம்பதியரின் மகள் சந்தியா (24). இவர், அதே பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக யோகா பயிற்சியாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், கர்ண பத்மாசனத்தில் இவர் 10 நிமிடங்கள் தொடர்ந்து நின்று புதிய உலக சாதனை படைத்து  இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் நோபல் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.

யோகா பயிற்சியாளரான சந்தியா, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் சாதனை படைத்தவர். கடந்த 2010-ஆம் ஆண்டு சிங்கபூரில் நடைபெற்ற காமன்வெல்த் யோகா போட்டில் தங்கம் வென்றவர். போதி தர்மர், திருமூலர் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவரிடம் பயிற்சி பெறும், 10 மாணவர்கள் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.