24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டமானது இன்று முதல் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் 24 மணி நேர தடுப்பூசி திட்டத்தை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 55 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று (அதாவது நேற்று செப்.22) சென்னையில் தொடங்கியுள்ள இந்த திட்டம் நாளை (அதாவது இன்று செப்.23) முதல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
அதன்படி, சென்னையில் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளிலும், மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் நாளை(செப்.23) முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இத்திட்டமானது வேலைக்குச் செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது மக்களின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் பொருளாதாரத்தையும் மையப்படுத்திதான். ஆதலால் கொரோனா குறைந்து விட்டதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக எண்ணி மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில், இன்று (செப்.23) முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.