24 மணி நேரத்தில் 11 லட்சம் காசா மக்கள் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் எச்சரிக்கையும், ஹமாஸ் நிராகரிப்பும்

காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7-வது நாளாக பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல். பேரழிவின் பிடியில் காசா இருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 500 பேர் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல், காசா என இரு தரப்பிலும் சேர்த்து 2800-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான சூழலில், காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் ஹமாஸ் குழுவுக்கு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் எச்சரித்தது.

காசா நகரில் வசிக்கும் மக்கள், நகரின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு தப்பிச் செல்ல வேண்டும் என்றும், அந்த எச்சரிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் தீவிரவாதிகள் காசா நகருக்கு அடியில் உள்ள சுரங்கப் பாதைகளில் பதுங்கியிருப்பதாக வெளிவந்த தகவலின் அடிப்படையில் அவர்களை குறிவைத்து தாக்க ஏதுவாக இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், “இந்த வெளியேற்றம் உங்கள் சொந்த பாதுகாப்புக்காக” என காசா மக்களிடம் எச்சரிக்கையாக தெரிவிக்கும்படி இஸ்ரேலிய ராணுவம் கூறியதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஹமாஸ் இந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ளது. காசாவில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. “பாலஸ்தீனிய மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெற்கு பகுதிக்கோ அல்லது எகிப்துக்கோ தப்பிச் செல்ல வேண்டும் என மிரட்டல்கள் வந்துள்ளன. எங்கள் பாலஸ்தீனிய மக்கள் ஆக்கிரமிப்பு (இஸ்ரேலிய) தலைவர்களின் மிரட்டல்களை நிராகரிக்கின்றனர். எங்கள் நிலத்திலும், எங்கள் வீடுகளிலும், எங்கள் நகரங்களிலும் வசிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதில் இருந்து இடம்பெயர்வது என்பது நடக்காது” என இஸ்ரேலின் எச்சரிக்கையை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

அதேநேரம், 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் உத்தரவு, பேரழிவுக்கான சூழ்நிலை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா. மூலம் மட்டுமில்லாமல், ட்ரோன்கள் மூலமும் காசா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்ரோன்களில் பேப்பர் துண்டுகள் கொண்டு காசா நகரைவிட்டு வெளியேற மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததாக செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். “உங்கள் வீடுகளை உடனடியாக காலி செய்து தெற்கே செல்லுங்கள்” என ட்ரோன்கள் மூலம் வெளியிடப்பட்ட எச்சரிக்கை குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

காசாவில் ஐ.நா.வின் நிவாரண முகாம்களில் 1,70,000 க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர் என ஐ.நாவின் துணை அமைப்பான யு.என்.ஆர்.டபுள்யு.ஏ. தெரிவித்துள்ளது. அதிகப்படியான மக்கள் இருப்பதால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியவில்லை என ஐ.நா. ஊழியர்கள் அல் ஜசீரா ஊடகத்தின் பேட்டியில் கூறியுள்ளனர். மேலும், இஸ்ரேலிய குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் தான் அதிகம். எனவே, வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

“காசாவில் இருந்து வரும் காட்சிகளால் நாங்கள் பயப்படுகிறோம். பாதிக்கப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் செல்ல பாதுகாப்பான இடம் இல்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” என யுனிசெஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை உலக நாடுகள் வழங்க வேண்டும் என பலஸ்தீன சுகாதார அமைச்சர் மை அல்-கைலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கு மருத்துவ மற்றும் அவசர உதவிகளை உடனடியாக வழங்க உலக நாடுகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் முன்வர வேண்டும்.

“காசா பகுதியின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே மின்சாரம் தயாரிக்க போதுமான எரிபொருள் மட்டுமே உள்ளது. நாங்கள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.