22 மாத தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 6 மணியோடு பிரச்சாரம் நிறைவு பெறவுள்ளது. மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 அப்போது அவர் பேசியதாவது;- “ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் அவர் மக்களுக்கு உதவி செய்து, கோரிக்கைகளை நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும். அந்த வகையில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு, ஏற்கனவே இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி தொகுதியில் இருக்கும் அனைத்து மக்களிடமும் நன்கு அறிமுகமானவர். 22 மாத தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. ஏற்கனவே இங்கு பிரச்சாரத்திற்கு வந்த போது, தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்ன திட்டம் கொண்டு வரப்பட்டது என்று கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக நிறைவேற்றினோம்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

51 − 49 =