புதுக்கோட்டை மாநகராட்சி, அசோக்நகர் 47-வது வார்டு பகுதியில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் திட்டப் பணி மற்றும் நரிமேடு 1-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணி ஆகியவற்றை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்கள்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்டவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் அசோக்நகர் 47-வது வார்டு பகுதியில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் திட்டப் பணியினையும், நரிமேடு 1-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணியினையும் அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாநகராட்சி, 47-வது வார்டு பகுதியில், 38, 39, 40, 41, 42 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25.31 கோடி மதிப்பீட்டில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் பணியினை அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. இப்பணி நிறைவடையும் போது இப்பகுதி பொதுமக்களுக்கு நிறைவான குடிநீர் வழங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாநகராட்சி, நரிமேடு 1-வது வார்டு பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.89.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பாதாள சாக்கடை திட்டப் பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. இப்பணி நிறைவடையும் போது இப்பகுதிகளில் கழிவுநீர் தேங்காத வகையில் பாதாள சாக்கடை வழியாக கழிவுநீர் வெளியேற்றப்படும்.
எனவே பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களை தொடர்புடைய அரசு அலுவலர்கள் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு முன்னோடி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பாதாள சாக்கடை அமைத்தல், குடிநீர் வழங்குதல், சாலை அமைத்தல், மின் வசதி ஏற்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன் அடிப்படையில், அசோக்நகர் 47-வது வார்டு பகுதியில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் திட்டப் பணியினையும், நரிமேடு 1-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணியினையும் இன்றையதினம் அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. இப்பணிகளை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் சரியான முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற மக்கள்நலத் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், துணை மேயர் எம்.லியாகத் அலி, புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் த.நாராயணன், வட்டாட்சியர் பரணி, திரு.எம்.எம்.பாலு, செந்தாமரை பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.