முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.25,500 கோடி) கடன் பெறுவதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ப்ளும்பெர்க் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை ரிலையன்ஸ் நிறுவனங்கள் அடுத்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை திருப்பிச் செலுத்துவதற்காக வாங்கப்படுகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தலைமையிலான இந்திய நிறுவனம், அடுத்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்காக பல்வேறு வங்கிகளுடன் கடன் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடன் பெறுவதற்கான விதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தொடர் பேச்சுவார்த்தைகளில் கொள்கைகளில் மாற்றம் ஏற்படலாம் என்கின்றனர் இதுகுறித்த விவரம் அறிந்தவர்கள்.
இந்தக் கடன் பெறும் ஒப்பந்தம் இறுதியாகும்பட்சத்தில் கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பின்பு, கடன் பெறும் வெளிநாட்டு சந்தைக்குள் (offshore borrowing market) ரிலையன்ஸ் மீண்டும் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டில் (2013) ரிலையன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், இவ்வகை கடன் மூலம் 8 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டியது நினைவுகூரத்தக்கது.
தற்போதைய இந்தக் கடன்தொகை, 2023 -ம் ஆண்டுக்கு பின்பு ஒரு இந்திய நிறுவனம் வெளிநாட்டில் வாங்கும் மிகப்பெரிய கடனாக இருக்கும். அதேபோல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அழுத்தத்தில் இருக்கும் நிலையில் இந்தக் கடன் தொகை வாங்கப்பட இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் வலுவான நிதிநிலை மற்றும் பலதரப்பட்ட வணிக மாதிரிகள், அதனை இந்தியாவின் மிகவும் நம்பகமான கடன் வாங்குபவர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது.