அவிநாசியில் லாரியின் பின்னால் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சொகுசுப் பேருந்து இன்று அதிகாலை கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அவிநாசி புறவழிச்சாலை புதுப்பாளையம் பிரிவு அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்த சொகுசுப் பேருந்து முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஷிபு (47). பேருந்து ஓட்டுநர். சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த பிரகதீஷ் (22), கோவை சூலூர் மாருதி ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (18), கோவை சூலூர் மாருதி ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த நித்யா (40), கோவைப்புதூர் நிஷர்தா அவென்யூவைச் சேர்ந்த நிர்மலா (63), கோவை புதூர் சசிதரன் மகள் உமா (59) உள்பட10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்து, அவிநாசி அரசு மருத்துவமனை, திருப்பூர், கோவை உள்ளிட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். சேலம் கொச்சின் ஆறு வழிச்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.