“என்மீது வீசப்பட்ட திரவம் பாதிப்பில்லாதது ஆனால் ஆபத்தானதாக இருக்கலாம் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக தலைமையிலான பாஜக அரசு சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் செலற்றுவிட்டதாக குற்றம்சாட்டினார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜ்ரிவால் கூறுகையில், “என்மீது வீசப்பட்ட திரவம் பாதிப்பில்லாதது என்றாலும் ஆபத்தானதாக இருக்கலாம். கடந்த 35 நாட்களில் என்மீதான மூன்றாவது தாக்குதல் இது. குற்றவாளிகளை விட புகார் கொடுப்பவர்கள் கைது நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்ற செய்தியினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பியுள்ளார்.
கேங்ஸ்டர்கள் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பால்யான் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு பதிலாக எங்களின் எம்எல்ஏக்கள் குறிவைக்கப்படுகிறார்கள். டெல்லி வாசிகளை பாதுகாப்பதற்கு குற்றவாளிகள் மீது நடடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வியை சந்தித்துவிடுவோம் என்ற பயத்தில் பாஜக நேர்மையற்ற வழிமுறைகளைக் கையாளுகிறது என்றும் குற்றம்சாட்டினார். நெருங்கி வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாத யாத்திரை மேற்கொண்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது சனிக்கிழமை மாளவியா நகரில் திரவம் வீசப்பட்டது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேஜ்ரிவால், “டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும்.” என்றும் தெரிவித்தார்.