தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, சாம்பியன்ஸ் கிட் விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, சாம்பியன்ஸ் கிட் விளையாட்டு உபகரண தொகுப்புகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் நலனிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உலக தரத்திலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், உதவித் தொகை வழங்குதல், விளையாட்டு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றையதினம் மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, சாம்பியன்ஸ் கிட் விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கப்பட்டது.

துணை முதலமைச்சர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர்கள் 2,600 நபர்களுக்கு, ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் சாம்பியன்ஸ் கிட் வழங்கும் வகையில், சென்னை மண்டலத்தை சேர்ந்த 600 மாணவர்களுக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில், சாம்பியன்ஸ் கிட் தொகுப்பை 11.11.2024 அன்று வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகள் 57 நபர்களுக்கு இன்றையதினம் சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகள் வழங்கப்பட்டது. இந்த தொகுப்பில், ஸ்மார்ட் வாட்ச், ஐஸ்பேக், தொப்பி, தண்ணீர் பாட்டில், கப், பேக் போன்றவை உள்ளடக்கியதாகும்.

மேலும், ஈரோட்டில் 06.11.2024 முதல் 08.11.2024 வரை உள்ள தேதிகளில் மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தினவிழா போட்டிகளில் தடகள விளையாட்டில் SDAT மகளிர் விளையாட்டு விடுதி தடகள மாணவிகள் நிவேதா உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கமும், ஸ்ரீகுரு பிரியா 100 மீட்டர் தடை தாண்டுதலில் வெண்கலப்பதக்கமும், ஆந்திர பிரதேசம் வாராங்கல் தென்மண்டல இளையோருக்கான தடகள பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் தனுஷா வெள்ளி பதக்கமும் பெற்று நமது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். மேலும், இப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். எனவே, இப்போட்டிகளில் வெற்றி பெற்ற தடகள வீராங்கனைகளுக்கும், தடகள பயிற்றுநருக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார், தடகள பயிற்றுநர் பவித்ரா, பயிற்றுநர்கள் அன்பழகன், விஜயகுமார், ராஜாமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.