சென்னையில் உணவு டெலிவரி செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
சென்னை அண்ணாசாலை மசூதி பின்புறம் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மேற்கண்ட பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்தனர். அவர்களின் உடமைகளை சோதனை செய்த போது, 12 கிராம் மெத்தபெட்டமைன், 24 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருவல்லிக்கேணி ஈஸ்வர் தாஸ் தெருவை சேர்ந்த பிபிஏ பட்டதாரியான மகேஷ் (30), அண்ணாநகர் 15-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பாரூக் (29) என்பதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில், முதாசீர் என்பவரிடம் போர்ட்டர், ஸ்விக்கி செயலி மூலம் மகேஷ் மற்றும் பாரூக் ஆகியோர் மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பெற்றுக் கொண்டு, முதாசீர் கூறும் முகவரியில் அதனை டெலிவரி செய்வதாகவும், ஒரு முறை டெலிவரி செய்வதற்கு ரூ.500 ஊதியமும் முதாசீர் அவர்களுக்கு வழங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 12 கிராம் மெத்தபெட்டமைன், போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முதாசீரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர்.