டெல்லியில் காற்ற மாசு அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை இயக்கவும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருவதை அடுத்து, காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM), பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று காலை 8 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை இடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மிக முக்கிய அரசு கட்டுமானப் பணிகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோலில் இயங்கும் BS-III (Bharat Stage-III) 4 சக்கர வாகனங்கள், டீசலில் இயங்கும் BS-IV 4 சக்கர வாகனங்களை தேசிய தலைநகர் பிராந்தியம் (National Capital Region-NCR) மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியில் இருந்து வரும் BS-III வகை 4 சக்கர வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் காற்றத் தர மேலாண்மை ஆணையம் டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் மட்டுமல்லாது, அதை ஒட்டிய என்சிஆர் மாவட்டங்களான குருகிராம், ஃபரிதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் ஆகிய இடங்களிலும் மாசுபடுத்தும் இத்தகைய நான்கு சக்கர வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக், சிஎன்ஜி மற்றும் டீசலில் இயங்கும் பிஎஸ்-6 வகை வாகனங்கள் தவிர அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்பட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி டெல்லியின் ஒட்டுமொத்த 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) 424 (கடுமையானது) ஆக நேற்று மாலை 4 மணிக்கு இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் இந்த குறியீடு 418 ஆக இருந்தது.
மேலும், ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை நிறுத்துவது மற்றும் ஆன்லைன் கற்பித்தல் முறைக்கு மாறுவது குறித்து டெல்லி மற்றும் பிற மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்றும் காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி யூனியன் பிரதேச சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், “மாசு பிரச்சினைக்கு டெல்லி மக்கள் மட்டுமே காரணம் அல்ல. என்சிஆர் மாநிலங்களும் அதை ஒட்டிய மாநிலங்களும் சமமாக இதற்கு பொறுப்பேற்க வேண்டும். டெல்லியின் காற்ற மாசு அளவை குறைக்க வேண்டுமானால், உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, “ஆம் ஆத்மி அரசின் செயலற்ற தன்மை காரணமாகவும், பஞ்சாபில் குப்பைகள் எரிக்கப்படுவதாலுமே டெல்லி நகரின் மாசு அளவு மோசமடைந்து வருகிறது.” என குற்றம் சாட்டினார்.