அரியலூரில் ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் 

அரியலூரில் ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரியலூர் அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பில் 53 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.89.94 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, 21,862 பயனாளிக்கு ரூ.173.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாது: அரியலூர் மாவட்டம் கடலாக இருந்து நில பரப்பாக மாறியது. அதனால் தான் இப்பகுதியில் டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளன. அரியலூர் வளர்ச்சி அடைய வேண்டும் என்றே பல்வேறு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

2021-மே 7-ம் தேதி நான் பதவி ஏற்று முதல் கையெழுத்து, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 575 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகை காலங்களில் மக்கள் ஊருக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் தவிர்த்தனர். ஆனால், நிகழாண்டு தீபாவளி தினத்தன்று கடைசி பயணி ஊருக்கு சென்ற பிறகு தான் நான் ஊருக்கு செல்வேன் என சென்னையில் நின்றவர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

பண்டிகை காலங்களில் பேருந்துகள் சிறப்பாக, மக்கள் எளிமையாக சென்று வரும் வகையில், போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவரும் கருணாநிதி தான். ராஜேந்திர சோழனுக்கு ஆடிதிருவாதிரை நிகழ்ச்சியை நடத்துவது நாம் தான். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக ரூ.29 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்றுள்ளது.

நிலக்கரி அனல்மின் திட்டத்துக்கு கையப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும், நிலத்துக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்ப பெறாமல் விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்த்தில் 243 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரப்பட்டுள்ளது. குன்னம் பகுதிக்கு கொள்ளிடம் குடிநீர் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 411 ஏக்கர் பரப்பளவில் காரை பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

அமைச்சர் சிவசங்கரின் கோரிக்கையை ஏற்று நதியனூர், ஜெயங்கொண்டம், வெற்றியூர் குடிநீர் திட்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு புதிய கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும். வாரணவாசி கிராமதத்தில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை, வாடகை கட்டிடத்தில் இயங்கும் துணை சுகாதார கட்டிடங்களுக்கு அரசு சார்பில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும். கால்நடை மருத்துவமனைகள் கூடுதலாக கட்டப்படும். ரூ.24 கோடி செலவில் பெரம்பலூர் மாவட்டத்தில் மருதையாற்றில் உயர்மட்டபாலம், வெங்காய பாதுகாப்புக் கூடம், பெரம்பலூரில் ரூ.56 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை, விடுதி கட்டிடங்கள் கட்டப்படும். அரியலூரில் ஒரே இடத்தில் ரூ.101 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும்.

அப்போது ஒரு சிலர் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். நான் அப்படி இல்லை. சொன்ன திட்டங்களை செயல்படுத்துவேன். என்னை தேடி மக்கள் வருகின்றனர். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். தமிழக மக்கள் என் மீதும், திமுக மீதும் வைத்துள்ள நம்பிக்கை வீணாகாது. இது எடப்பாடி பழனிசாமியை கலங்க வைத்துள்ளது. இதனால் அவர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அவரது 4 ஆண்டு கால ஆட்சி காலத்தில் செய்து முடித்துவிட்டு பெருமை படுகிறார்.

பொய்க்கு மேக்கப் போட்டால் அது நிஜமாகாது. எடப்பாடி பழனிசாமி நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என சொல்லமுடியுமா? கமிஷனுக்கு பயந்து முதலீட்டாளர்கள் ஓடினர். நான் முதல்வராக பதவியேற்றப்பின்னர் மீண்டும் தொழில் முதலீட்டாளர்களை அழைத்தேன். இப்போது, பலரும் முதலீடு செய்ய வந்துள்ளனர். எடிப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படா முடியும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், தற்போது மத்திய மண்டலம் என சுற்றி வருகிறேன். வளர்ச்சியை உறுதி செய்யவே களஆய்வு செய்து வருகிறேன். விருதுநகர் காப்பகத்தில் குழந்தைகளை சந்தித்தேன். அங்கிருந்த குழந்தைகள் என்னை அப்பா என அழைத்தது மனதை நெகிழ வைத்தது. விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், காலை உணவுத்திட்டம் என பல்வேறு திட்டங்களுடன் தற்போது ஊட்டச்சத்து உறுதித்திட்டத்தை 2-ம் கட்டமாக இன்று தொடங்கிவைத்துள்ளேன்.

இதனால் 7 லட்சம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் அத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நலிந்த மக்களுக்கான ஆட்சி இந்த ஆட்சி. குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை கேட்க முடியாது. அதனைச் செய்யவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் நாளை வளர்ச்சி அடைந்த பிறகு, எனது திட்டங்கள் குறித்து பேசுவார்கள். எனது குடும்பம் முன்னேற ஸ்டாலின் ஒரு காரணம் என குழந்தைகள் நாளை சொல்வார்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழுவுருவ சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் கிராத்தில் டீன்ஷூஸ் நிறுவனத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.1,000 கோடி முதலீட்டில், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கான சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, வாரணவாசி கிராமத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தில், ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.