விழுப்புரம் அருகே அழகு சாதன விற்பனையகத்தில் தீ விபத்து : ரூ.2 கோடி பொருட்கள், ரூ.5 லட்சம் பணம் எரிந்து சாம்பல்

செஞ்சியில் உள்ள அழகு சாதனங்கள் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரூ 5 லட்சம் பணம் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகியுள்ளது.

செஞ்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி பஜாரில் பெண்கள் அழகு சாதன விற்பனையகத்தை நடத்தி வருபவர் லட்சுமணன் (50) இவரது தம்பி பாலாஜி வழக்கம்போல் கடையை நேற்று இரவு 10 மணி அளவில் மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். 10:30 மணி அளவில் திடீரென கடையின் முன்பக்க பகுதியில் தீ எரிவதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் தீ மள மளவென கடை முழுவதும் பரவி படி வழியாக மேல் மாடியில் தீ பரவியது. இதில் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் தடுமாறினர். உடனடியாக மேல்மலையனூர், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு இரவு தொடங்கிய பணி இன்று காலை 8 மணி வரையில் போராடி தீயை அணைத்தனர்.

இதில் கீழ் தளத்தில் உள்ள வளையல் பொருட்கள், பேன்சி பொருட்கள், முதல் மாடியில் வைக்கப்பட்டிருந்த செருப்பு வகைகள், பேக்குகள், பேன்சி பொருட்கள், கிப்ட் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் தீயை அணைக்க முடியாததால் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு முன்பகுதி ஷட்டரை உடைத்து தீயணைப்புத் துறையினர் விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா என செஞ்சி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அருகில் துணிக்கடை மற்றும் பல்வேறு சூப்பர் மார்க்கெட் கடைகள் வளாகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தீயை அணைத்ததால் அருகில் இருந்த கடைகள் தீப்பறவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இத்தீவிபத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது மேலும் இரண்டு நாட்களாக விற்பனை செய்த பணம் சுமார் ரூ.5 லட்சம் எறிந்து தீயில் நாசமானது. இது குறித்து செஞ்சி போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 15 தினங்களுக்கு முன்பு பஸ் நிலையம் எதிரில் இருந்த சைக்கிள் கடையும் எரிந்து சுமார் 20 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.