இணையவழி, தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரம் : உயர்கல்வி நிறுவனங்கள் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயர்கல்வி நிறுவனங்கள் அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்; நடப்பு கல்வியாண்டில் (2024-25) பிப்ரவரி பருவத்தின் சேர்க்கைக்கான தொலைதூரப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் தொலைதூர, இணைய வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தகுதியான கல்வி நிறுவனங்கள் /deb.ugc.ac.in/ எனும் வலைதளம் வழியாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் சேர்த்து நவம்பர் 15-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள யுஜிசி தலைமை அலுவலகத்தில் வந்து சேரும்படி கல்வி நிறுவனங்கள் அனுப்பிவைக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுதொடர்பான விதிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலா என்று கூறப்பட்டுள்ளது.