இணைய பாதுகாப்பு மையத்தை தொடங்கியது சென்னை ஐஐடி

இந்தியாவில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐஐடி இணையப் பாதுகாப்பு மையத்தைத் (Cybersecurity Centre) தொடங்கியுள்ளது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் நிறுவனம், நாட்டில் புதுமைகளை ஊக்குவிக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த புதிய இணையப் பாதுகாப்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான பாதுகாப்பு, கிரிப்டோகிராபி, குவாண்டம் பாதுகாப்பு, ஐஓடி பாதுகாப்பு ஆகியவற்றில் அதிநவீனத் தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சியை இந்த மையம் மேற்கொள்ளும்.

‘இணையப் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கான மையம் (Centre for Cybersecurity, Trust and Reliablity – CyStar) என்ற பெயரிலான இந்த மையம், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, மைய ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியை ஸ்வேதா அகர்வால், பேராசிரியர் செஸ்டர் ரெபைரோ, சென்னை ஐஐடி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆசிரியர் ஜான் அகஸ்டின், புகழ்பெற்ற கல்வியாளர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

புதுமையான ஆராய்ச்சி, கல்வி ஆகியவற்றின் மூலம் இணையப் பாதுகாப்பின் எல்லைகளைத் தொடுவதே சைஸ்டாரின் நோக்கமாகும். இணையப் பாதுகாப்புக்கு பலமுனை அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்து பரந்த அளவிலான நிபுணத்துவத்தை உள்ளடக்கியதாக சைஸ்டாரில் ஆராய்ச்சிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “இணைய அச்சுறுத்தல்கள் பண ஆதாயத்திற்காக மட்டுமின்றி, முக்கிய உள்கட்டமைப்புகளும் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு ஆளாகின்றன. தேசத்தின் பாதுகாப்பிற்காக இணையப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கான செயலில் இறங்குவது மிகவும் முக்கியம். இந்த சூழலில் இத்தகைய முயற்சிகள் மிகமிக அவசியமாகும்” எனக் குறிப்பிட்டார்.

உலகளவிலும் உள்நாட்டிலும் கல்வி, தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தி, தற்போதைக்கும் எதிர்காலத்திற்கும் சிக்கலான பாதுகாப்பு சவால்களைச் சமாளிக்கத் தேவையான நிபுணத்துவத்துடன் மாணவர்கள், வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை இந்த மையம் தயார்படுத்துகிறது, இதனால் பாதுகாப்பான டிஜிட்டல் உலகத்திற்கு பங்களிப்பை வழங்க முடியும். அத்துடன் நிதி, சுகாதாரம், மோட்டார் வாகனங்கள், மின்னணுத் தொழில்நுட்பம் போன்ற தொழில்களில் முக்கியமான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரிவாக கவனம் செலுத்தப்படும்.

சைஸ்டாரின் முக்கிய ஆராய்ச்சியில் தொழில் மற்றும் அரசுத் துறைகளான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், கல்வி அமைச்சகம், விடெஸ்கோ டெக்னாலஜிஸ், காஸ்பஸ்கி, ஐடிபிஐ வங்கி, எல்ஜி இந்தியா, சப்தாங் லேப்ஸ், அல்கோரண்ட், இந்தோ- பிரெஞ்ச் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான ஊக்குவிப்பு மையம், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு செயலகம் போன்றவை இடம்பெற்றுள்ளன.