தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் திறக்கப்பட்ட 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதன கிடங்கு, ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம், கொண்டமநாயக்கன்பட்டி உண்டு உரைவிட பள்ளி, திண்டுக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரிய புதிய கட்டிடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
உறுதிமொழி ஏற்புக்குழுத் தலைவரான சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில், அரவிந்த் ரமேஷ், சீனிவாசன், நல்லதம்பி, பூமிநாதன், மோகன், எம்.சக்கரபாணி, மணி, ஜெயக்குமார், அருள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மலைக்கோவில் அன்னதான சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் பூங்கொடியுடன் சென்று ஆய்வு செய்தனர். பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் உணவு வகைகள், உணவின் தரம் அன்னதானம் குறித்து பக்தர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் திருக்கோயில் அதிகாரிகள் உடனிருந்தனர்.