இளநிலை பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி : யுஜிசி முக்கிய அறிவுறுத்தல்

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் சுற்றுச்சூழல் கல்வி பாடத்திட்டத்தை சேர்ப்பது தொடர்பாக யுஜிசி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சுற்றுச்சூழல் கல்வி குறித்த பாடத்திட்டத்தை இடம்பெறச் செய்வது தொடர்பாக ஏற்கெனவே தேவையான வழிகாட்டுதல்கள் யுஜிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.

அவ்வாறு வகுக்கப்படும் பாடத்திட்டத்தில் பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி போன்ற அம்சங்கள் இடம்பெற வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் கற்பித்தலில் மாணவர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்கும் வகையில் குழு கற்பித்தல் உள்ளிட்ட புதிய அணுகுமுறைகளை புகுத்த வேண்டும்.

இது குறித்து கூடுதல் தகவல்கள், வழிகாட்டுதல்கள் யுஜிசி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டின் சுற்றுச்சூழலை சிறந்த முறையில் கட்டமைக்கும் வகையில் அது தொடர்பான கற்றல் முறைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க உயர்கல்வி நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.