அதானி குழுமம் சீனாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், பிரதமர் சீனாவுக்கு க்ளீன் சிட் அளித்துள்ளது அதானி குழுமத்துக்கான ஆதரவு கடிதமே என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அதானி குழுமம் சீனாவில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பை குறைமதிப்புக்கு உட்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கடந்த 2020-ம் ஆண்டு ஜூன்19 அன்று பிரதமர் மோடி வழங்கிய க்ளீன் சிட், இது வரையிலான இந்திய பிரதமர்கள் வெளியிட்ட அறிக்கையிலேயே மிகவும் மோசமானது. மேலும் அது இந்திய பகுதிகள் மீதான சீனர்களின் அத்துமீறல் மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளின் யதார்த்த நிலையை மறைத்தது.
நமது எல்லைப் பகுதியிலும் பிராந்தியத்துக்குள்ளேயும் சீன வீரர்களின் அத்துமீறல்கள் இருந்த போதிலும், மத்திய அரசு அதற்கு பதில் அளிப்பதில் இருந்து தவறி விட்டது. டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சீனாவிலிருந்து இறக்குமதி அதிகரிக்கப்பட்டு உள்நாட்டில் சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் மத்திய அரசு இங்குள்ள சீன பணியளர்களுக்கு விரைவாக விசா வழங்க முடிவெடுத்துள்ளது.
இரண்டாவதாக, சீனா மற்றும் கிழக்கு ஆசியாவில் அதானி குழுமத்தின் முந்தைய நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. சாங் சுங் லிங் என்ற தைவானைச் சேர்ந்த தொழிலதிபர் பல்வேறு அதானி குழுமங்களுக்கு இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவரது குடும்பத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஐ.நாவின் தடையையும் மீறி வடகொரியாவுக்கு எண்ணெய் கடத்தியதாக 2017-ல் குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைள் நமது தேசத்தின் பாதுகாப்பை குறைமதிப்பீடு செய்வதுடன், இந்தியாவுக்கு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. உதாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அதானி நிலக்கரி ஆலையில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கான வங்கதேசத்தின் ஒப்பந்தம், சமீபத்தில் அங்கு ஏற்பட்ட போராட்டத்துக்குக்கான முக்கிய புள்ளியாக இருந்தது.
இலங்கை, கென்யா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் அதானியின் நலன்கள் இந்தியாவுக்கு தீங்கு விளைவித்துள்ளன. ஏனெனில் அதானியுடனான பிரதமரின் நட்பு உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நலன்களை அதானி குழுமத்தின் வணிக நலன்களுக்காக விட்டுக்கொடுப்பட்டு உலக அளவில் இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிலான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி – அதானியின் சிறப்பு நடப்புக்காக இந்தியா ஏற்கெனவே உள்ளூர் மற்றும் உலக அளவில் பல தியாகங்களைச் செய்துள்ளது” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் சீனாவில் விநியோக சங்கிலிக்கு தீர்வு காண்பதற்கும், திட்டச் சேவைகளை நிர்வகிப்பதற்கும் சீனாவில் ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கியிருப்பதாக வந்த செய்தியினைத் தொடர்ந்து ஜெய்ராம் ரமேஷின் இந்த அறிக்கை வந்துள்ளது.