சென்னை அரசுப் பள்ளியில் பிற்போக்குத்தனமாக பேசிய மகாவிஷ்ணு கைது : ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை

அரசுப் பள்ளியில் பிற்போக்குத்தனமாக பேசிய மகாவிஷ்ணுவை போலீஸார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பிற்போக்குத்தனமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அத்துடன் சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் அவரிடமும் மகா விஷ்ணு உரத்தக்குரலில் அவமதிக்கும் விதமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்தினார். 4 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசுப் பள்ளியில் பிற்போக்குத்தனமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக பல்வேறு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த மகாவிஷ்ணு, எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், இன்று மதியம் 1 மணிக்கு சென்னை வர உள்ளதாகவும், பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷை நேரில் சந்தித்து எனது தரப்பு விளக்கத்தை அளிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம், சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். சைதாப்பேட்டை உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் மகாவிஷ்ணுவிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் மகாவிஷ்ணுவை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். விமான நிலையத்திலிருந்து மகாவிஷ்ணுவை அழைத்துச் சென்ற போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தெற்கு இணை ஆணையர் சி.பி.சக்கரவர்த்தி, அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திக் சுமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினர் அளித்த புகார்கள் தொடர்பாகவும் மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.