ஓநாய்களின் தாக்குதல்களைத் தொடர்ந்து அச்சுறுத்தல்களில் இருந்து கிராம மக்களை பாதுகாப்பதற்காக பஹ்ரைச் கிராம நிர்வாகம் தங்குமிடங்களை உருவாக்கியுள்ளது. முன்பு பஞ்சாயத்து இல்லமாக இருந்த இடம் தற்போது தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.
பஹ்ரைச்சின் மகாசி தாலுகாவிலுள்ள சந்த்பையா கிராமத்தில் கட்டிடத்தை தங்குமிடமாக மாவட்ட நிர்வாகம் மாற்றியுள்ளது. இதனால் கிராமத்தில் வீடில்லாதவர்கள், சரியான கதவு இல்லாத வீட்டினர் பாதுகாப்பாக இங்கு வந்து தங்கலாம். ஓநாய்களின் பயத்தினாலும், தங்களின் வீடுகள் பாழடைந்த காரணத்தினாலும் பலர் பாதுகாப்பான இந்த தங்குமிடத்தில் வந்து தங்கியுள்ளனர்.
இந்தக் காப்பகத்தில் வசிக்கும் முதியவர்கள், ஓநாய்களின் பயம் காரணாக இந்த பாதுகாப்பான இடத்தில் வந்து தங்கியிருப்பதாக தெரிவித்தனர். எங்களின் வீடுகள் பாழடைந்து விட்டன. அதனால் பாதுகாப்புக்காக இங்கு வந்து தங்கி இருக்கிறோம் என்று கிராமத்தில் உள்ள முதியவர்கள் தெரிவித்தனர். “இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் ஓநாய் ஒன்று இங்கு கண்ணில்பட்டது. கடந்த மாதத்தில் ஒரு பெண் ஓநாயால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
அரசு உருவாக்கியிருக்கும் தங்குமிடத்தின் கண்காணிப்பாளர் கூறுகையில், “கிராம மக்கள் தங்குவதற்கான வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. ஏழு முதல் எட்டுபேர் இங்கு தங்குவதற்காக வந்துள்ளனர். சிலர் கடந்த 5 நாட்களாக இங்கே உள்ளனர். மற்றவர்கள் 10 நாட்களாக இருக்கிறார்கள். தங்குவதற்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். ஓநாய் குறித்த பயம் மற்றும் அவர்களின் வீடுகள் மோசமாக இருப்பதாலும் மக்கள் இங்கு தங்கியுள்ளனர். எம்எல்ஏ-வும் பஞ்சாயத்து அதிகாரிகளும் ஏற்பாடுகளை கவனித்துக் கொள்கின்றனர். இங்கு போதுமான அளவில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கிராமத்தினரை அச்சுறுத்தி வந்த 6 ஓநாய்களில் 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இரண்டு ஓநாய்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இன்று காலை, ஹர்பக்ச் புர்வா பகுதியில் இருந்து 2 -3 கிலோ மீட்டர் தள்ளியுள்ள பகுதிகளில் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு தெர்மல் ட்ரோன்களின் உதவியுடன் அந்தப் பகுதியில் ஓநாய்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
பஹ்ரைச்சில் மனிதனை உண்ணும் ஓநாய்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதல்கள் நடந்துள்ள 30-35 கி.மீ தூரம் வரையுள்ள மொத்தப்பரப்பும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மூத்த அதிகாரிகள் உட்பட 165 வனத்துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வனத்துறையின் பொதுமேலாளர் சஞ்சய் பதாக் கூறுகையில், “உயிரிழப்புகள் பதிவானதைத் தொடர்ந்து வனத்துறையினரும், பிற அதிகாரிகளும் உசார்படுத்தப்பட்டுள்ளனர். ஓநாய்களைப் பிடிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை நான்கு ஓநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. ஓநாய்களை கண்காணிக்க எல்லா இடங்களிலும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.” என்றார்.