புதுக்கோட்டையில் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

 புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்றது. பயிற்சியினை  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) சண்முகம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் (பொ) முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி பயிற்சியினை சிறப்பாக பெற்று தாங்கள் பணிபுரியும்  பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து உயர்கல்வி பயில வழிகாட்ட வலியுறுத்தி கூறினார்கள்.

இப்பயிற்சியில் கருத்தாளர்களாக விரிவுரையாளர்கள் சங்கரன், சசிகலா, ஆசிரியர் கருத்தாளர்களான பட்டதாரி ஆசிரியர்கள் கார்த்திக்கண்ணன், ரமேஷ், ஆசிரியர் பயிற்றுனர் அழகேசன் ஆகியோர் கலந்துகொண்டு நம்மை நாம் அறிவோம், உடலினை உறுதி செய், தேர்வு அறையில் நடந்து கொள்வது எப்படி, பிரச்சினைகளை கையாள்வது எப்படி, இலக்குகளை எட்டிப்பிடி, வாகை சூட வா, 10 ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் ஆகிய தலைப்புகளில் விரிவாகவும், விளக்கமாகவும் பயிற்சி அளித்தனர்.

முன்னதாக வந்திருந்த அனைவரையும் விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் சுதந்திரன், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் ஆனந்தராஜ், மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மெ.சி.சாலை செந்தில்,  பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், பசுவதி, விரிவுரையாளர்கள்,  புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தினைச் சேர்ந்த 112 ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.