கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ.,க்கள் உள்ளிருப்புப் போராட்டம் : சித்தராமையாவுக்கு நெருக்கடி

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ.,க்கள் நேற்று (புதன்கிழமை) இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (MUDA) ஊழல் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கோரியும், முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் பாஜக எம்எல்ஏ.,க்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏ.,க்களுக்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏ.,க்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்றிரவு சட்டப்பேரவைக்கு படுக்கைகளுடன் வந்த பாஜக, மஜத எம்எல்ஏ.,க்கள் அங்கேயே படுத்து உறங்கினர். இந்த வீடியோ காட்சிகளை கர்நாடகா பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இப்போராட்டம் குறித்து விஜயேந்திரா எடியூரப்பா எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவையும் பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது. விஜயேந்திரா அந்தப் பதிவில், “முதல்வர் சித்தராமையா செய்த மைசூரு முடா ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அவர் பதவி விலக வேண்டும். மாநிலத்துக்கு வளர்ச்சி ஏற்படுத்தாத காங்கிரஸ் கட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சித்தராமையாவும், அவரது அரசாங்கமும் பட்டியலின மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. பட்டியலின மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை முறைகேடு செய்துள்ளது. பட்டியலின மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

ஏற்கெனவே வால்மீகி ஊழலும் முதல்வர் மீது உள்ளது. இப்போது இந்த முடா ஊழல் மூலம் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பெயரில் 14 மனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் பதவிக்கான கண்ணியத்தையும், கவுரவத்தையும் சித்தராமையா சிதைத்துவிட்டார். அவர் பதவி விலக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகளான மித்தல், முரளி கண்ணன் ஆகியோர் மீது முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி செய்ததாக‌ 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வால்மீகி ஊழல் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள் கர்நாடகாவில் முடா ஊழல் தொடர்பான எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.